14 Jul 2012
மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும் இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.
மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்
ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!
ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.
யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.
1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.
2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.
3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.
4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்
அழையா விருந்தாளியின் மனசு!
மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.
அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.