International news

கிப்து ஜனாதிபதி தேர்தல்: சில வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை



முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசின் உளவுப் பிரிவு தலைவர் ஒமர் சுலைமான், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் ஹைரத் ஷாதிர், சலபி வேட்பாளர் அபு இஸ்மாயில் என 10வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் மே 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட23 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் தற்போது 10 வேட்பாளர்கள் தகுதி இழப்புச் செய்யப்பட்டுள்ளதால் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் அரபு லீக்கின் முன்னாள் தலைவரும் ஹொஸ்னி முபாரக் அரசின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த அம்ர் மூஸாமிதவாத இஸ்லாமிய வாதியான அப்துல் மெரிம் அபுல் பது மற்றும் முபாரக் அரசின் பிரதமராக இருந்த அஹமத் ஷபி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் உளவுப் பிரிவு தலைவர் ஒமர் சுலைமான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடு பூராகவும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையிலேயே அவர் தகுதி இழப்புச் செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை ஒமர் சுலைமானுக்கு எதிராக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நடத்திய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சுலைமான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக போதுமான மக்கள் கையெழுத்து பெறவில்லை என்பதால் அவர் தகுதியிழக்கச் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர் 15 மாகாணங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் ஆதரவு கையொப்பம் பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது 30 ஆயிரம் ஆதரவுக் கையொப்பங்கள் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எகிப்தின் பிரதான முஸ்லிம் அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் கைரத் அல் ஷாதிர்ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் வருடத்திற்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து மக்கள் எழுச்சிக்கு பின்னர் கடந்த வருடமே விடுதலை பெற்றார். ஹைரத் ஷாதிரை தீவிரவாத குற்றச்சாட்டு மற்றும் நிதி சேகரிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் முபாரக் அரசு சிறை வைத்திருந்தது.
இந்நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவர் வேட்பாளராக ஆண்டுகள் கழித்தே போட்டியிட முடியும் என்ற அந்நாட்டு அரசியல் சட்டத்தின் கீழ் ஹைரத் ஷாதிர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டில் மற்றுமொரு முன்னணி வேட்பாளரான அய்மன் நூருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக போட்டியிட்ட அய்மன் நூர் தேர்தலுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே விடுதலை பெற்றார்.
இதில் ஸலபிக்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் அபு இஸ்மையிலின் காலஞ்சென்ற தாய் அமெரிக்க பிரஜை என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட ஆணையம் தடை விதித்துள்ளது. எகிப்து தேர்தல் சட்டத்தின்படி வேட்பாளரின் மனைவி பெற்றோர் எகிப்து பிரஜா உரிமை பெற்றவராக மாத்திரமே இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடைக்கு எதிராக 48 மணி நேரத்திற்குள் மேன்முறையீடு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. இதன் படி மேற்படி வேட்பாளர்கள் தமது தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்கனவே ஷாதிருக்கு மாற்று வேட்பாளர் ஒரு வரையும் தேர்தலில் நிறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் மொஹமட் மொர்சி ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஒருவேளை ஷாதிருக்கு போட்டியிட முடியாத பட்சத்தில் அந்த அமைப்பு சார்பில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சி பெரும்பாலான ஆசனங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஷாதிரின் தேர்தல் பிரசாரக் குழுவின் பேச்சாளர் முராத் மொஹமத் அலி அறிவித்துள்ளார்.முபாரக் அரசை மீண்டும் கொண்டு வரும் கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அந்த முடிவுக்கு எதிராக அங்கு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் தொடர்ந்தும் இராணுவ கவுன்ஸிலே ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே அரசை கையளிப்பதாக இராணுவ கவுன்ஸில் அறிவித்துள்ளது.