நிம்மதி எனும் மகிழ்ச்சி...
'சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.'எங்கோ வாசித்த இந்த வரிகளின் ஆழத்தில் நிம்மதியும் சந்தோஷமும் மறைந்திருந்து தம் பொருளை உணர்த்தி நிற்கின்றன.
உலக வாழ்க்கையின் அலங்காரங்கத்தில் சந்தோஷமே நிரந்தரக் குறியீடாக இருக்கின்றது.ஒரு ஒற்றைச் சந்தோஷத்திற்காக மனிதன் என்னென்ன வெல்லாமோ செய்து விடுகின்றான்.தன் சிந்தனையின் எல்லாத் தொலை வுகளிலும் அது பற்றிய நினைவுகளையே வேலிகளாக போட்டு வைத்தி ருக்கிறான்.
இந்த உலக வாழ்க்கையை வெளிப்பார்வையில் பார்க்கும் ஒருவன் அதனைப் பிரமாண்டமாகவே கண்டு கொள்கிறான்.அதன் வளைவை, தொய்வை, நிச்சய மின்மையை அவன் காணத்தவறிவிடுகிறான்.
வாழக்கை பற்றிய புரிதலற்றவன் சந்தோஷமாக இருக்கிறான்.வாழ்க்கையை சரியாகப் புரிந்தவன் நிம்மதியாக இருக்கிறான்.வாழ்க்கை பற்றிய புரிதலி னடியாகவே நிம்மதியும் சந்தோஷமும் தோன்றுவதாகத் தெரிகிறது.
சந்தோஷம் நீடித்து நிலைப்பதில்லை.அது கணப் பொழுது வாழ்க்கை போலத்தான்.வருவதும் போவதும்,திடீரெனத் தோன்றி மறைவதும்தான் அதன் இயல்பு.மேக உருமாற்றம் போல அது தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.
நிம்மதி என்பது ஆளற்ற தனித் தீவு மாதிரி.பாரிய அலைகளை உண்டாக்கும் கடல்களுக்கு மத்தியிலும் தன் தனித்தன்மையுடன் அது நிற்கின்றது.எந்த சப்தமும் அதன் நிசப்தத்தை கலைத்து வடுவதில்லை.
மனிதன் நிம்மதியை முற்படுத்தாமல் சந்தோஷத்தை முற்படுத்தியதே அவன் கவலையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகியது.அவ்வப்போதைய சந்தோ ஷங்களுக்காக மனிதன் நெடுநாள் நிம்மதியை தொலைத்துக் கொள்கி றான்.பின்னர் ஏமாற்றங்களைச் சந்தித்தபின் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்கிறான்.
நிம்மதியென்பது சந்தோஷத்தினடியாக மட்டும் வருவதல்ல.ஒரு நியாயமான கவலையும் நிம்மதியைக் கொண்டு வந்து தர முடியும்.நிம்மதி என்பது எப்போதும் இருப்பது.மகிழ்ச்சியும் கவலையும் வந்து போகக் கூடியது. இதனைத்தான் நபியவர்கள் “ஒரு முஃமின் நிலை ஆச்சரியத்திற்கு ரியது...மகிழ்ச்சியான ஏதும் நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து கிறான்.துன்பங்கள் ஏதும் நடந்தால் பொறுமையாக இருக்கிறான்“(முஸ்லிம்) எனக் கூறினார்கள்.
மனிதன் உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் போதுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் மிகச் சரியாகப் அறிந்து கொள்கிறான். இதனையே அல்லாஹ் ;அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன' என்கிறான்