இன்று புகையிலை எதிர்ப்பு தினம்!

இரண்டு நூற்றாண்டுகளாக உலகம் ஓர் மாபெரும் ஆபத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு, மொழி, இன, மத பாகுபாடின்றி அனைவரையும் வாட்டும் மிகப் பெரியதொரு பிரச்சனை. ஒவ்வொரு 6 விநாடிகளில் உலகில் ஒருவரின் உயிரை பறித்துக்கொள்ளும் அளவுக்கு மிகக்கொடியது. தொற்று நோய் அல்லாத இதர நோய்களில் முதலிடத்தை வகிக்கும் இந்த வில்லனை ‘புகையிலை’ என அழைக்கலாம்.
புற்றுநோய்,இதய நோய் உள்ளிட்ட நோய்களின் பேக்கேஜ்களை மனிதர்களில் உருவாக்க எளிதான வழியாக புகையிலை மாறியுள்ளது. உலகில் எவருக்கும் இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், அதன் விபரீதங்களை உட்கொள்ளவோ, புகையிலையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணரவோ மனித சமூகத்தில் பெரும்பாலோர் தயாரில்லை என்பதனை உணர்ந்து ஏற்பட்ட கவலையின் காரணமாக கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே”இத்தினத்தின் நோக்கம்.