இன்று புகையிலை எதிர்ப்பு தினம்!

இரண்டு நூற்றாண்டுகளாக உலகம் ஓர் மாபெரும் ஆபத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு, மொழி, இன, மத பாகுபாடின்றி அனைவரையும் வாட்டும் மிகப் பெரியதொரு பிரச்சனை. ஒவ்வொரு 6 விநாடிகளில் உலகில் ஒருவரின் உயிரை பறித்துக்கொள்ளும் அளவுக்கு மிகக்கொடியது. தொற்று நோய் அல்லாத இதர நோய்களில் முதலிடத்தை வகிக்கும் இந்த வில்லனை ‘புகையிலை’ என அழைக்கலாம்.
புற்றுநோய்,இதய நோய் உள்ளிட்ட நோய்களின் பேக்கேஜ்களை மனிதர்களில் உருவாக்க எளிதான வழியாக புகையிலை மாறியுள்ளது. உலகில் எவருக்கும் இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், அதன் விபரீதங்களை உட்கொள்ளவோ, புகையிலையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணரவோ மனித சமூகத்தில் பெரும்பாலோர் தயாரில்லை என்பதனை உணர்ந்து ஏற்பட்ட கவலையின் காரணமாக கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே”இத்தினத்தின் நோக்கம்.
சிகரெட் புகையானது, அருகில் இருக்கும், “பாசிவ் ஸ்மோக்கர்” எனப்படும் பெண்கள், குழந்தைகள், உடன் பணியாற்றுவோரை பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள “நிக்கோட்டின்” புகை பழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் நச்சுப் பொருள்.
புற்றுநோயை ஏற்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட வேறு நச்சுப் பொருட்கள் சிகரெட்டில் உள்ளன. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.
2030 க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால் அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெறுவது இளம் தலைமுறையினர் இந்த மோசமான பழக்கத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மாணவர்கள் தாம் இதனை ஒருமுறையாவது உபயோகித்து பார்ப்போமே! என்று விரும்புவதாகவும் பின்னர் அவர்கள் புகைக்கு அடிமையாக மாறுவதாகவும் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு 12 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையேயான 3956 சிறுவர்களிடம் நடத்தப்பட்டது. புதுடெல்லியில் 12 பள்ளிக்கூடங்களில் இருந்து தேர்வுச் செய்யப்பட்ட மாணவர்களை 2009-ஆம் ஆண்டு முதல் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.
‘பாலிவுட் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளும் இளைய தலைமுறையின் புகைப்பிடிக்கும் பழக்கமும்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சிறுமிகளை விட சிறுவர்கள்தாம் திரைப்படத்தை பார்த்து போதையூட்டும் பொருட்களை பயன்படுத்த துவங்குகின்றனர் என ஹெல்த் ப்ரமோஷன் அண்ட் டொபாக்கோ கண்ட்ரோல் தலைவர் டாக்டர்.மோனிக்கா அரோரா தெரிவிக்கிறார்.
டாக்டர் கவுரங் நாஸர் இந்த ஆய்விற்கு தலைமை வகித்தார். புகையிலை நிறுவனங்களின் சின்னங்களை பதித்துள்ள ஆடைகளையும் இதரப் பொருட்களையும் உபயோகிக்க விரும்புபவர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு சுற்றுப்புறங்கள் புகைப் பழக்கத்திற்கான சாதகமான சூழலை உருவாக்கும் வேளையில் ஆண்டு தோறும் ஒருதினம் மட்டும் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து கவலைப்பட்டு என்ன புண்ணியம்? எனவும் நம்மில் கேள்வி எழாமல் இல்லை. இதற்கு ஆளும் அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
வருமானத்தை அதிகரிப்பதற்காக இத்தகைய பொருட்களை அனுமதிப்பது ஆபத்தானது.
புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக தந்திரங்களும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட்சிய போக்கும் புகையிலை பொருட்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு காரணமாகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் இந்தியா உள்பட 170 உறுப்பு நாடுகள் புகையிலையை முழுமையாக கட்டுப்படுத்துவதை லட்சியமாக வைத்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை மிகப்பெரிய கனவை நோக்கிய தீரமான காலடி சுவடாக சிறப்பிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு உறுப்புநாடும் உடன்படிக்கையை நிறைவேற்ற எவ்வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை பொறுத்துதான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசும் புகையிலை பொருட்களின் விநியோகம் மற்றும் விளம்பரம் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. ஆனால், இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமாகும்.
புகைப்பழக்கம் குறித்த சில தகவல்கள்:
* புகையிலைப் பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.
* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப்பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை.
* புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச் சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது.
* புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளம் வயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பையும், ரத்தக் கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக் குழாய், உணவுக் குழாய், சிறுநீரக பாதைவரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகைபிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
நிறுத்தினால் என்ன நன்மை?
* 20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக் குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
புகைப்பதை நிறுத்துவது எப்படி?
சிலர் படிப்படியாக நிறுத்துவோம் என கூறுவது உண்டு. ஒரேயடியாக நிறுத்தினால் ஏதாவது எதிர் விளைவுகள் ஏற்படும் என அஞ்சுகின்றனர். ஆனால், இதுஉண்மையல்ல. ஒரேயடியாக நிறுத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கடைபிடிக்க வேண்டியவை
1.புகைப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுக்கவும்.
2.எடுத்த முடிவில் உறுதியாக இருக்கவும். முதல் ஒரு வாரம் சற்று கடினமாக தோன்றலாம். பின்னர் சரியாகிவிடும். புகைப்பதற்கான எண்ணம் உருவானால் வேறு ஏதேனும் சாப்பிடலாம். உதாரணம்:சூயிங்கம்,ஸ்வீட்.
3.புகைப் பழக்கம் கைவிட்ட பின் அதைப் பற்றிய எண்ணங்களை மாற்ற இறைவனை தியானிக்கவும். பிரார்த்தனை புரியவும்.
4.வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணருங்கள். அற்பமான சந்தோஷத்திற்காக நீண்டகால பயனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும்.
5.புகைப்பதின் ஆபத்தை தெரிந்தே நாம் அதனை பயன்படுத்தினால் அது தற்கொலைக்கு சமமானது என்பதை உணரவும்.
6.புகையிலை பழக்கமில்லாதவர்கள் அதனை பயன்படுத்த துவங்காதீர்கள்.
7.பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்மாதிரியாக திகழ வேண்டும். பெற்றோர் ஆசிரியர் ஆகியோரின் பழக்கம் குழந்தைகள், மாணவர்களின் முன்மாதிரியாக மாறிவிடும்.
8.கல்வி நிலையங்களை மையமாக கொண்டு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
9.உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகையிலை, பான்-மசாலா உபயோக, விற்பனை தடையை ஏற்படுத்தலாம்.
உதாரணம்:ப்ளாஸ்டிக் பைகளுக்கு தடை ஏற்படுத்தியது போல.
உதாரணம்:ப்ளாஸ்டிக் பைகளுக்கு தடை ஏற்படுத்தியது போல.
10.புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.
மனித வாழ்வை மயானமாக மாற்றும் புகையிலையை இன்றோடு மறப்போம்!
நிச்சயமாக அல்லாஹ், “ஒரு சமுதாயம் தன்னை தானே மாற்றிக்கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்.” (திருக்குர்ஆன்: 13:11 )
“உங்கள் கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்” (திருக்குர்ஆன்: 2:195 )
அ.செய்யதுஅலி
No comments:
Post a Comment