Wednesday, 8 August 2012

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி!

Curiosity lands on Mars
வாஷிங்டன்:விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லாக அமெரிக்க விண்வெளி மையமான நாஸா  செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதன் முக்கியப் பணி செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் உள்ளனவா என்பதை சோதனையிடுவதே.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஃப்ளோரிடாவில் கேப் கனாவெரல் நிலையத்தில் இருந்து மார்ஸ் சயன்ஸ் லேபரட்டரி என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 56.7 கோடி கிலோ மீட்டரை தாண்டி இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 900 கிலோ கிராம் எடைகொண்ட இந்த விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.

மீண்டும் சங்க்பரிவாருடன் கை கோர்க்கும் ஜெயா: ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு!

VP election- Jaswant gets Jayalalithaa's support
சென்னை:சங்க்பரிவாருக்கு எப்பொழுதும் உற்றத் தோழியான தமிழக முதல்வர் ஜெயலலிதா துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அன்சாரி வெற்றிப் பெறுகிறார்!



Ansari 'favourite to win' vice presidential election
புதுடெல்லி:14-வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்சாரி மீண்டும் வெற்றி பெற்று துணைக் குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.
அன்சாரியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார். அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை சாராத சில கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இவர்களில் 500 பேரின் வாக்குகள் அன்சாரிக்கு ஆதரவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு மட்டும் மக்களவையில் 204 உறுப்பினர்களும்; மாநிலங்களவையில் 71 பேரும் உள்ளனர். திரிணமூல் காங்கிரசுக்கு மக்களவையில் 19 பேரும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். திமுகவுக்கு மக்களவையில் 18 பேரும் மாநிலங்களவையில் 7 பேரும் உள்ளனர்.
அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். பகுஜன் சமாஜ கட்சிக்கு மக்களவையில் 21 பேரும் மாநிலங்களவையில் 15 பேரும் உள்ளனர்.
ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் 114 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 49 ஆகும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவையில் 20 பேரும் மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். சிவசேனைக்கு மக்களவையில் 11 பேரும் மாநிலங்களவையில் 4 பேரும் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் மொத்தம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக தனது ஆதரவை ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்குவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தது.

அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மத்திய அரசு கூறுகிறது!



Assam violence
புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்.

முஸ்லிமாக மாறி திருமணம் புரிந்த ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி ஃபிஸா முஹம்மது மரணத்தில் மர்மம்!

Mystery shrouds death of Fiza, ex-wife of former Haryana deputy CM
சண்டிகர்:ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் மனைவியான ஃபிஸா முஹம்மதின்(வயது 39) உடல் அழுகிய நிலையில் மொஹாலியில் உள்ள அவரது வீட்டு படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது.
அனுராதா பாலி என்கிற ஃபிஸா முகமது மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். இவரது உடல் தலைநகர் சண்டீகர் அருகே உள்ளே மொஹாலியில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று(திங்கள்கிழமை)கண்டெடுக்கப்பட்டது.
அவருடைய வீட்டினுள்ளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல்வாசிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் ஃபிஸா முஹம்மதின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது

டெல்லி போலீஸ் நடத்தியது போலி என்கவுண்டர்! – உயர்நீதிமன்றம்!

7 acquitted by Delhi high court
டெல்லி:டெல்லி மாநகரத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என குற்றம் சாட்டி என்கவுண்டர் மூலம் 7 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த சம்பவம் போலியானது என கூறி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது. இது டெல்லி போலீசுக்கு  பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி டெல்லி போலீஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
போலி என்கவுண்டரில் கைது செய்த நபர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்யும் சூழல் இல்லை என்று நீதிபதிகளான எஸ்.ரவீந்திர பட், எஸ்.பி.கார்க் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
2005-ஆம் ஆண்டு டெல்லி-குர்கான் எல்லையில் அரங்கேறியதாக கூறப்படும் என்கவுண்டர் போலியானது என்றும், அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலைச் செய்ய வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே வேளையில் போலி என்கவுண்டரை உருவாக்கிய போலீஸ் குழுவில் நான்கு பேர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்களை டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கொண்டது. இவர்கள் மீது விசாரணை நடத்தி துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.
2005 ஜூலை 5-ஆம் தேதி டெல்லி-குர்கான் எல்லையில் காரில் சென்று கொண்டிருந்த தீவிரவாதிகளை என்கவுண்டர் மூலம் சரணடைய வைத்ததாக டெல்லி போலீஸின் சிறப்புக் குழு கூறியது.

Friday, 27 July 2012

றமழானைப் பயன்படுத்துதல் சில ஆலோசனைகள்


ramadhanநன்மையையும் நற்செயல்களையும் நோக்கிய எட்டுக்களின் ஆரம்பப் புள்ளியாக இவ் உபதேசம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கின்றேன்.
நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் றமழான் எங்களிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் எம்மிடம் இருக்க வேண்டும். எம்மிடம் பிரதானமாக இரண்டு தயார் நிலைகள் இருக்க வேண்டும்.
1. மனோ நிலை மற்றும் செயல் ரீதியான தயார் நிலை:
நாம் றமழானை அடைந்து கொள்ள இப்போதிலிருந்தே அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
ரமழானுக்கு முன்னால் எமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்:
எமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
"எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Friday, 13 July 2012

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!



Missed call.
மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும்  இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.
மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்
ஆர்குட்,  ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!
ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.
யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.
1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.
2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.
3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.
4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்
அழையா விருந்தாளியின் மனசு!
மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.
அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

சோசியல் மீடியாக்களில் முஸ்லிம் விரோத கருத்துக்களை தடுக்கவேண்டும் – முலாயம்சிங்!


Mulayam Singh Yadav to talk to PM about 'anti-Islam' content on Facebook
லக்னோ:சோசியல் மீடியாக்களில் கார்ட்டூன்கள் மற்றும் கமெண்டிகள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்புரைச் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் முலாயம் சிங் தெரிவித்தார்.
சோசியல் மீடியாக்களில் இத்தகைய செயல்பாடுகள் வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு காரணமாகும். நாட்டின் அமைதியை இது கெடுத்துவிடும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ரஜேந்திர சவுதரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: கருத்து சுதந்திரத்தின் பெயரால் இத்தகைய பிரச்சாரங்களை கண்டு வாய்மூடி இருந்தால் நமது நாட்டின் சமூக நல்லிணக்க சூழல் கெட்டுவிடும். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருடன் விவாதித்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களை கட்டுப்படுத்துவதுக் குறித்து பேசுவோம் என ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.

முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!



Manmohan tells Maha govt, HM to examine police bias against Muslims
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.