நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிமன்றமா?

2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் நிகழ்த்தப்பட்ட குல்பர்கா ஹவுஸிங் சொசைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டி மோடிக்கும் அவரது தோழர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
குஜராத் வீதிகளில் முஸ்லிம்களின் உயிர்களும், மானமும், சொத்துக்களும் சூறையாடப்பட்ட வேளியில் கர்ண கொடூரமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளில் ஒன்றுதான் குல்பர்கா ஹவுஸிங் கூட்டுப் படுகொலை. இங்கு பெண்களும், குழந்தைகளும் உள்பட 69 பேரை மிருகத்தனமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். இப்படுகொலையில் பலியானவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஸாப்ரியும் அடங்குவார்.
குல்பர்கா கூட்டுப் படுகொலையில் மோடிக்கும், அவரது அமைச்சரவை, போலீஸ், கட்சி தோழர்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கிருப்பதாக குற்றம் சாட்டி கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் புகார் மனுவை அளித்தார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் குல்பர்கா சொசைட்டி உள்பட குஜராத் இனப்படுகொலை வேளையில் நிகழ்த்தப்பட்ட 9 கூட்டுப் படுகொலைகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது. விசாரணை தொடர்பான அறிக்கையை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கூடவே, இவ்வழக்கை முடித்துக்கொள்ள கோரியும் மனு அளித்துள்ளது.