Wednesday, 18 April 2012

நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிமன்றமா?


நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிமன்றமா?


SIT certificate
2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் நிகழ்த்தப்பட்ட குல்பர்கா ஹவுஸிங் சொசைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டி மோடிக்கும் அவரது தோழர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
குஜராத் வீதிகளில் முஸ்லிம்களின் உயிர்களும், மானமும், சொத்துக்களும் சூறையாடப்பட்ட வேளியில் கர்ண கொடூரமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளில் ஒன்றுதான் குல்பர்கா ஹவுஸிங் கூட்டுப் படுகொலை. இங்கு பெண்களும், குழந்தைகளும் உள்பட 69 பேரை மிருகத்தனமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். இப்படுகொலையில் பலியானவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஸாப்ரியும் அடங்குவார்.
குல்பர்கா கூட்டுப் படுகொலையில் மோடிக்கும், அவரது அமைச்சரவை, போலீஸ், கட்சி தோழர்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கிருப்பதாக குற்றம் சாட்டி கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் புகார் மனுவை அளித்தார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் குல்பர்கா சொசைட்டி உள்பட குஜராத் இனப்படுகொலை வேளையில் நிகழ்த்தப்பட்ட 9 கூட்டுப் படுகொலைகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது. விசாரணை தொடர்பான அறிக்கையை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கூடவே, இவ்வழக்கை முடித்துக்கொள்ள கோரியும் மனு அளித்துள்ளது.


எஸ்.ஐ.டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஸாகியா ஜாஃப்ரி அளித்த புகாரில் மோடிக்கும், இதர 62 நபர்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டுப் படுகொலைகளில் தொடர்பு இருப்பது குறித்து குற்றம் சாட்டியபடி அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்யும் அளவுக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.
கலவரத்தை தூண்டுவதற்கு உரிய க்ரிமினல் விருப்பங்கள் மோடிக்கு இருந்ததாக கூற ஆதாரமில்லை. முதல்வர் என்ற நிலையில் அவர் செயல்படாததும், அவர் காட்டிய அலட்சியமும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படக்கூடியது அல்ல என்று எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுவதாக அஹ்மதாபாத் மெட்ரோபாலிடம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கூறியது.
மோடி மற்றும் அவரது அரசு இயந்திரத்திற்கு எதிராக எழுந்த 32 குற்றச்சாட்டுக்களை பரிசோதித்த சிறப்பு புலனாய்வு குழு அவற்றிற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டுபிடித்ததாம். இவ்வாறு இரத்தக்கறைப் படிந்த மோடிக்கு எஸ்.ஐ.டி ஞானஸ்தானம் வழங்கியதைத் தொடர்ந்து புழங்காகிதம் அடைந்துள்ளது சங்க்பரிவார கூடாரம்.
காவிப் படையின் மிருக வெறிக்கு குழந்தைகளும், பெண்களும் பலியான குல்பர்கா கூட்டுப் படுகொலை வழக்கில் குஜராத்தில் நீதி கிடைக்காததால் ஸாகியா ஜாஃப்ரியும், சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. மேலும் எஸ்.ஐ.டியின் அறிக்கையை ஆராய அமிக்கஸ் க்யூரியான (நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞர்) ராஜு ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டது. அமிக்கஸ் க்யூரியின் கண்டுபிடிப்புகள் எஸ்.ஐ.டி அறிக்கையுடன் இணைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியது. ஆனால், எஸ்.ஐ.டி சமர்ப்பித்த இறுதி அறிக்கை, இனப் படுகொலைகளில் மோடிக்கு பங்கில்லை என்று கூறி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஆனால், நீதிமன்றம் இதுத்தொடர்பாக தீர்ப்பு எதுவும் அளிக்கவில்லை. 30 தினங்களுக்குள் ஸாகியா ஜாஃப்ரி கோரியபடி அவருக்கு எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையின் நகல்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. வகுப்புவாத திமிரும், ஹிந்துத்துவா வெறியும் மூளைக்குள் ஏறிய மோடியின் அரசும், அரசு இயந்திரங்களும், காவிக் கயவர்களும் இணைந்து இந்திய வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான இனப் படுகொலைகளை நிகழ்த்திக் காட்டினர்.
மக்களுக்கு பாதுகாப்பையும், நீதியையும் வழங்கவேண்டிய அரசு, பகிரங்கமாகவே வன்முறையாளர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களிடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். இதனை மோடியின் அரசும் மறுக்கவில்லை. வன்முறைகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து புகார்களும் வீணானது. ஓரளவு சிரமப்பட்டு நகர்த்தப்பட்ட வழக்குகளை சீர்குலைக்க மோடியின் அரசும், அவரது கட்சியும் என்ன விலைக் கொடுக்கவும் தயாராகின.
அரசியல் சாசனத்தின் தத்துவங்களையும், சட்டம் மற்றும் நீதியின் கட்டமைப்பையும் பகிரங்கமாக அவமதித்துவிட்டு மோடியின் தலைமையிலான ஹிந்த்துத்துவா வெறியர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களில் உப்பை புரட்டிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியாக நாட்டின் உச்சபட்ச நீதிபீடமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடுச் செய்யும் பொருட்டு எஸ்.ஐ.டியிடம் 9 கூட்டுப் படுகொலைகளை குறித்து விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. மாநில அரசின் தலையீடு நிரூபணமானதைத் தொடர்ந்து சாட்சிகளை மிரட்டும் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வாறு குழந்தைகளும், பெண்களும் உள்பட 33 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சர்தார்புரா கூட்டுப் படுகொலையில் 31 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதேப்போல ஆனந்த் மாவட்டத்தில் ஓதேவில் 23 பேரை உயிரோடு எரித்துக் கொலைச்செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வகுப்புவாத வன்முறை வழக்குகளில் தொடர்புடையவர்களை, குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுதலைச்செய்யும் சுதந்திர இந்தியாவின் அனுபவத்தில் இவ்விரு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஓரளவு ஆறுதலை தருகின்றன.
அதேவேளையில், முஸ்லிம் இனப் படுகொலை வழக்குகளில் உணர்ச்சியை தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டு, முதல்வர் பதவியில் இருந்துகொண்டே பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஹிந்துத்துவா குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் மோடிக்கு எஸ்.ஐ.டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது மிகப்பெரிய அநீதியாகும்.
முன்னாள் குஜராத் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்பட பல பிரமுகர்களும் மோடிக்கு இனப் படுகொலையில் பங்கு குறித்து நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு சட்ட நுட்பங்களின் பின்புலத்தில் எஸ்.ஐ.டி மோடியை விடுவித்துள்ளது.
சர்தார்புரா, ஓதே ஆகிய வழக்குகளில் இந்த சட்ட நுட்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்பது குறித்து தெளிவில்லை. அம்புகளை சிக்கவைத்துவிட்டு அதனை எய்தவர்கள் தப்பிக்கும் போக்குதான் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைகளிலும் காணப்படுகிறது.
எஸ்.ஐ.டியின் உருவாக்கம் குறித்தும், அதன் விசாரணை நகர்வைக் குறித்தும் கண்காணித்த நடுநிலையாளர்கள், ஏற்கனவே தெரிவித்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் எஸ்.ஐ.டி அறிக்கையின் முக்கிய பகுதிகள் கசிந்ததை தொடர்ந்து மோடிக்கு எஸ்.ஐ.டி நற்சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. ஆனால், எஸ்.ஐ.டி பரிசோதித்த குற்றச்சாட்டுகளில் உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரன் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை பதிவுச் செய்திருந்தார்.
எஸ்.ஐ.டி ‘தீர்ப்பு’ வழங்கியுள்ள அறிக்கைக்கு எதிராக ஸாகியாவும், இதர நபர்களும் நீதிமன்றத்தில் புகார் அளிப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று அமிக்கஸ் க்யூரி கூறியுள்ளார்.
இனி, சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பின் மூலம் நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிபீடமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment