Thursday, 11 July 2013

எகிப்திய இராணுவப் புரட்சி: சவூதி, அமெரிக்க, இஸ்ரேலிய முக்கூட்டுச் சதி

ஆறு தசாப்த கால இராணுவ சர்வதிகார ஆட்சிக்குப் பிறகு, முதற் தடவையாக ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மூர்ஸி, கடந்த 3 ஆம் திகதி இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

அரசியல் யாப்பை ரத்து செய்து, பொம்மை அரசாங்கம் ஒன்றை தற்போது இராணுவம் அமைத்திருக்கிறது. அரபு வசந்தத்தின் மூலம் பதவி துறந்த ஹுஸ்னி முபாரக் கால அரசியல் நிலமைகள் மீண்டும் நாட்டில் திரும்பியிருக்கின்றன. படையனர் எல்லா இடங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன.

அல்ஜஸீரா தொலைக்காட்சியின் அரபு சேவை உள்ளடங்கலாக, பல தொலைக் காட்சி சேவைகள் மூடப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும், தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். மூர்ஸிக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமைத்துவம் உட்பட, அதன் அங்கத்தவர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மூர்ஸி பதவிக்கு வந்து சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு, எகிப்திய ஜனநாயகம் குறித்த பசுமையான கனவுகளைச் சிதறடிக்கும் வகையில் இம்மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கெய்ரோவில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி, சவூதி அரேபியா- இஸ்ரேல்- அமெரிக்கா போன்ற சக்திகள் இதன் பின்னணியில் இருக்கின்றன. பல பில்லியன் டாலர்களைச் செலவளித்து, மிகவும் திட்டமிட்ட வகையில் இச்சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சவூதி அரசாங்கம் இருக்கின்றமைதான் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களைப் பெருமளவில் அதிர்ச்சி கொள்ளச் செய்கின்றது.

இராணுவப் புரட்சி இடம்பெற்று, இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் இராணுவம் முபாரக் பாணியிலான பொலிஸ் அரசாங்கத்தை அமைத்தது.

இது போன்றதொரு சதி முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விடவும் முடியாது. மூர்ஸியைப் பொறுத்தவரை, அவருக்கிருந்த ஒரேயொரு தகுதியின்மை, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அவரை ஆதரித்தமைதான். மூர்ஸியின் தகுதிகள் மற்றும் அவரது நடவடிக்கைகள் எப்படிப் போனாலும், முபாரக் காலத்தில் வயிறு வளர்த்து வந்தவர்கள் எவ்வாறாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே கண்ணாக இருந்தார்கள்.

மூர்ஸியைப் பொறுத்த வரை, நிறைய உள்நாட்டு, பிராந்திய மற்றும் வெளிநாட்டு எதிரிகள் இருக்கின்றனர். ஹுஸ்னி முபாரக் காலத்தில் வயிறு வளர்த்து வந்தவர்களிடம் இருந்தும், முபாரக்கிற்கு நெருக்கமானவர்கள் பலரைக் கொண்ட அரச மற்றும் நிர்வாகத் துறைகளிடம் இருந்தும், மூர்ஸிக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை. அனைத்திற்கும் மேலாக எகிப்திய இராணுவத்துடனான உறவிலும் நெருடல்கள் இருந்து வந்தன. இஸ்ரேலிற்கு அடுத்த படியாக அமெரிக்காவின் மிக அதிக இராணுவ உதவிகளைப் பெற்று வரும் எகிப்திய இராணுவம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தது என்பதில் சந்தேகமில்லை.

பிரதான பிராந்திய எதிரிகளுள் ஒன்றான சவூதி அரேபியா, இஸ்லாம் சார்பான ஜனநாயக அரசாங்கமான மூர்ஸி அரசாங்கத்தை விரும்பவில்லை. எனவே, மூர்ஸி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்க மற்றும் மேற்குலகிடம் தமது அரசியல் பிழைப்பிற்கு தங்கி இருக்கும் சவூதி அரேபியாவின் வால்களான, மன்னராட்சி நிழவும் வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகளும், எகிப்தில் ஜனநாயமும் இஸ்லாமும் வளர்ச்சி காண்பதை தமக்கு அடிக்கும் அபாய மணிகளாகவே கருதின.    

சர்வதேச அரங்கில் மேற்கும், அமெரிக்காவும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் மேற்கு சக்திகள் எகிப்தில் ஜனநாயக வழிமுறையில் வளர்ச்சி பெறுவதை சகித்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.
பிரந்தியத்தில் ஸ்திரத் தன்மையின்மையின் ஒரே மூலமாகத் திகழ்கின்ற இஸ்ரேலைப் பொறுத்தவரை, மூர்ஸி ஆட்சியைக் கவிழ்த்து, அடிவருடி அரசாங்கம் ஒன்றை அமைப்பதையே அதுவும் விரும்பியது.        

இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வகையில் இராணுவப் புரட்சியொன்று இடம்பெறலாம் போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த பெப்ரவரி, 13 ஆம் திகதி போல் ரொபர்ட் இது குறித்து எழுதியிருந்தார். “அமெரிக்கா- இஸ்ரேல்- சவூதி அரேபியா: மூர்ஸியைப் பதவி கவிழ்க்க ரகசியத் திட்டம் தீட்டுகின்றன” என்ற தலைப்பில் “Socialist Action” இல் அவர் எழுதிய கட்டுரை, எகிப்திய இராணுவப் புரட்சியை புரிந்து கொள்வதற்கு உதவி புரியும் என்ற வகையில், அதனை இங்கு வழங்குகின்றோம்.

2011 இல் இஸ்ரேல் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் விவகாரத்தில் ஏகாபத்தியமும், இஸ்ரேலும் ஒன்றுபட இயலவில்லை. இஸ்ரேலும் சரி, ஐக்கிய அமெரிக்காவும் சரி, எகிப்து அரபுலகில் மிகப் பிரபலமான நாடு என்பதை மாத்திரமன்றி, இஸ்ரேலுடனான எதுவித இராணுவ நெருக்கடிகளின் போதும், அது தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கப் போகின்றது என்பதையும் அறிந்துள்ளன.

சவூதி அரேபிய சர்வதிகார ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, தனது சொந்த இருப்பு தொடர்பான கவலை அவர்களுக்கிருக்கிறது. அரபுலகில் உருவாகின்ற எதுவித நெருக்கடிகளின் போதும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவையே சவூதி ஆட்சியாளர்கள் தமது நம்பிக்கைக்குரிய நண்பர்களாகக் கருதுகிறார்கள்.

எகிப்திய அதிபர் மூர்ஸி மிதவாதப் போக்குக் கொண்டவர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனாலும், பழைய அரசாங்கத்தை ஒத்த அரசாங்கமொன்றை ஆட்சிக்குக் கொண்டு வரவே அவை விரும்புகின்றன.

மூர்க்கமான வன்முறைகள் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் எகிப்திய அரசியல் நெருக்கடியின் பின்னணி இதுதான். முன்னைநாள் அதிபர் முபாரக் ஆதரவாளர்களும், மூர்ஸியின் எதிரிகளும் கூடுதலாக இருக்கின்ற எகிப்திய இராணுவம் இத்தகைய வன்முறைகளுக்கு பல நேரங்களில் பக்க பலமாகவும் அல்லது கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பதிலும் சந்தேகமில்லை.

ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையுடன் கூடிய நடத்தையை வெளிப்படுத்தவும், குழப்பங்களை உருவாக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டில் பெருகியுள்ள குழப்பங்களைத் தணித்து, நாட்டைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் இராணுவப் புரட்சியை மேற்கொள்வதற்கு இயைபான சூழலை உருவாக்குவதே இதன் பின்னணியில் இருக்கின்ற தெளிவான நோக்கமாகும்.

இந்நோக்கம் தெளிவாகவே வெளிப்பட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம், தாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என இராணுவம் எச்சரித்திருந்தது. இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அப்துல் பத்தாஹ் அல் சிஸ்ஸி “அரசியல் முரண்பாடு நாட்டை வீழ்ச்சியின் விழிம்பை நோக்கி அழைத்துச் செல்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

எகிப்தின் மோசமடையும் பொருளாதார நிலையும், நிதி நெருக்கடி ஒன்றிற்குள் அது சரிவடைந்து கொண்டிருக்கின்றமையும் இப்பின்னணியிலேயே பார்க்கப்பட வேண்டும்.

இஸ்ரேல், சவூதி அரேபியா, அமெரிக்கா

சவூதி அரேபியா தனது எண்ணெய் வருமானத்தில் இருந்து கணிசமானதொரு தொகை நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சவூதியின் வரவு செலவுத் திட்ட மிகை 102 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இம்மிகையில் சிறியதொரு தொகை கூட எகிப்திய நிதி நெருக்கடிடை தீர்ப்பதற்குப் போதுமானதாகும். எவ்வாறாயினும், எகிப்துக்கு இந்நிதி கிடைப்பதாக இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், தற்போதைய அரசாங்கத்திற்குப் பதிலாக பழைய அரசாங்கத்தை விரும்புகின்றவர்கள், எகிப்திற்குத் தேவையான நிதி அதற்குக் கிடைப்பதைத் தடை செய்து வருகிறார்கள்.

இஸ்ரேலிய, அமெரிக்க, சவூதிய சக்திகளின் இலக்குத் தெளிவானது. என்னதான் எகிப்திய சகோதரத்துவ அமைப்பு ஒரு மிதவாத சக்தியாக இருந்தாலும், பிராந்தியத்தில் இஸ்ரேல்- அமெரிக்க- சவூதிய சக்திகளின் பலத்தை சகோதரத்துவ அமைப்பின் வெற்றி குறைத்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

எகிப்திய- இஸ்ரேலிய உடன்படிக்கையை மாற்றுவதற்கு மூர்ஸி முயற்சி செய்யாவிட்டாலும், இஸ்ரேலின் அண்மைய காஸா தாக்குதல்களைக் கடுமையாக அது கண்டித்திருந்ததோடு, ஹமாஸ் அமைப்பையும் அது பலப்படுத்தியது. சீனா மற்றும் ஈரான் என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏகாதிபத்திய மற்றும் இஸ்ரேலிய நலன்களைத் திருப்தி செய்வதாக இல்லை.

சகோதரத்துவ அமைப்பின் முன்னேற்றம் ஏனைய வளைகுடா நாடுகளின் அரசாங்கத்திற்கு விரோதமான அமைப்புக்களையும் பலப்படுத்தி இருக்கின்றது. தனது சொந்த இருப்பைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய, இந்நிலையை மாற்றி அமைப்பதற்கே சவூதி அரேபிய அரசு விரும்புகின்றது.

முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கம்

கடந்த ஜூன் தேர்தலில் மூர்ஸியின் வெற்றியைத் தொடர்ந்து, சகோதரத்துவ அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் வழிவகைகளை ஏகாதிபத்தியம் ஆராய்ந்தது. சகோதரத்துவ அமைப்பு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொண்டதல்ல என்பதை ஏகாதிபத்தியம் தெளிவாக அறிந்து வைத்திருந்தது. ஆயினும், ஏகாபத்தியத்திற்கு ஏற்புடையதாக இருப்பது முழுமையான அடிவருடி அரசாங்கம் ஒன்று மாத்திரமே.

எனவே, பொருளாதார மற்றும் அரசிய குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம், ஓர் இராணுவப் புரட்சியை உருவாக்குவதற்குரிய சூழல் உருவாக்கப்படுகிறது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிடம், நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்குதல்களுக்குரிய தீர்விகள் காணப்படாமையால், குழப்ப நிலை மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்திடம் இருந்தோ அல்லது சவூதி அரேபியாவிடம் இருந்தோ எதுவித நிதி உதவிகளையும் பெறாமல், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாக இருப்பின், அது முதலாளித்துவ நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். சகோதரத்துவ அரசாங்கம் முதலாளித்துவ மட்டங்களிலும் கூட்டமிப்புக்களைக் கொண்டுள்ள நிலையில், அத்தகைய தீர்வுத் திட்டங்களை அது பரிசீளிக்கவே இல்லை.

எனவே, நாட்டில் திருப்தி இன்மை பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த இலையுதிர் காலத்தில் இருந்து எதிர்ப்பலைகள் பரவ ஆரம்பித்தன. கோடைக் காலத்தில் இது மேலும் தீவிரமானது. பரவலாக வீழ்ச்சி அடைகின்ற வாழ்க்கைத் தரம் இத்திருப்தியின்மை மேலும் கூர்மையாக்குகின்றது.

எகிப்திய மதசார்பின்மையின் யதார்த்தம்

முபாரக் காலத்து நீதித் துறைக்கு எதிராக செயற்படுவதற்குரிய அதிகாரத்தை, தான் பெற்றுக் கொள்கின்ற வகையில், மூர்ஸி கடந்த நவம்பரில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். தொடர்ந்து அரசியல் யாப்பு மாற்றத்திற்கான மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தினார். இச்செயற்பாடுகள் தோற்றுவித்த சாதகமான அரசியல் சூழ்நிலையை, ஏகாதிபத்திய சார்பு சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இடதுசாரி சக்திகளை தமது தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கும் அது உதவியது.

அம்ர் மூஸாவும், மேற்கு சார்பு கொண்ட முஹம்மத் அல்- பராடியும் “மதச்சார்பின்மை” என்ற கோஷத்தைப் பயன்படுத்தி, இடதுசாரித் தேசியவாதி ஹமீத் ஹம்தானியை, National Salvation Front என்ற பெயரில், ஒரே அணியின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

அரசியல் யாப்பு மாற்றத்தை வாபஸ் பெறுவதோடு, மூர்ஸி அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரி வருகின்றனர்.

தற்போதைய நிலையில், மூர்ஸியிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் பலமுள்ள சக்தி இராணுவம் மாத்திரமே என்பதை இவர்கள் அறிந்துள்ளனர். நாட்டில் ஒழுங்கீனங்களைத் தோற்றுவித்து, இராணுவப் புரட்சிக்கும் ஏற்ற கள நிலமைகளை சமைப்பதையே இவர்கள் தமது அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ளனர். இவர்களுடன் இஸ்ரேல், சவூதி அரேபியா, அமெரிக்கா போன்ற சக்திகள் கைகோர்த்து செயற்படும் என்பது மாத்திரமன்றி, உதவிகளையும் புரியும் என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும், அவற்றின் எகிப்திய அடிவருடிகளுக்கும் தடங்கல்கள் இல்லாமல் இல்லை. முன்னாள் சர்வதிகாரி முபாரக்கை அகற்றுவதற்கான புரட்சியின் நினைவுகள் மிகவும் பசுமையாக இருக்கின்றன. அண்மைய வாக்கெடுப்பு, முபாரக் எதிர்ப்பு சக்திகள் பலமாக இருப்பதையும், பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருப்பதையும் தெளிவு படுத்துகின்றன.

ஆனால், எதுவித ஊகமும் மேற்கொள்ள முடியாது. இஸ்ரேல், அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற சக்திகள் இரணுவப் புரட்சிக்குரிய களநிலமையை உருவாக்குவதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் போல் ரொபர்ட்ஸ் எதிர்கூறியது போன்று, சவூதி- இஸ்ரேல்- சவூதி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இன்று மூர்ஸி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு விட்டது.

சில மில்லியன் மக்கள் மூர்ஸி பதவி விலக வேண்டும் எனக் கோரி, வீதி ஆர்ப்பாட்டம் செய்தாலும், இன்றும் இரண்டில் மூன்று பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையினர் மூர்ஸிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ளவில்லை.

இன்று எகிப்து பிளவு பட்டதொரு தேசம். அமெரிக்க- இஸ்ரேலிய- சவூதி சக்திகள் தமது உலகளவில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக எகிப்தை மற்றொரு சிரியாவாக மாற்றிவிடுவார்கள் என்பதே இன்றுள்ள கேள்வியாகும்.
நன்றி -லதீப் பாரூக்

No comments:

Post a Comment