Friday, 11 May 2012

கெளரவ கொலைக்கு ஆதரவாக உ.பி போலீஸ் டி.ஐ.ஜி


DIG Satish Kumar Mathur

டெல்லி:தனது மகளை க்ரிமினல்கள் கடத்திச் சென்றதை குறித்து புகார் அளிக்க வந்த தந்தையிடம் ‘தற்கொலைச் செய்யுங்கள் அல்லது மகளை கொலைச் செய்ய வேண்டும்’ என்று கூறிய போலீஸ் டி.ஐ.ஜி சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் இன்று வழக்கம் போல காவல் நிலையங்களுக்கு விசிட் கொடுத்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் பிரபுத்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தைச் சேர்ந்த ஷவ்கீன் முகமது என்பவரை மாத்தூர் சந்தித்தார். ஷவ்கீனின் மகள் இஷ்ரத் ஜஹான்(14) ஓடிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட டிஐஜி இஷ்ரத்தின் தந்தையைப் பார்த்து, “உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வர என்னிடம் மாயசக்தி ஒன்றும் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போயிருந்தால் நீங்கள் வெட்கி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். என் தங்கை மட்டும் இவ்வாறு செய்திருந்தால் அவளைக் கொன்றிருப்பேன் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவரின் கூற்று உள்ளூர் ஊடக கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு டிஐஜியே கௌரவக் கொலையை ஆதரிக்கிறார் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டு வராண்டாவில் நின்று கொண்டிருந்த இஷ்ரத்தை 2 வாலிபர்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மொகின் சத்பல் மற்றும் ஒமா அத்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இஷ்ரத் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அந்த இருவரும் இஷ்ரத்தை கெடுத்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இது குறித்து இஷ்ரத்தின் தந்தை ஷவ்கீன் கூறுகையில்,
“என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். ஆனால் டிஐஜி அவள் ஓடிப்போய்விட்டதாகக் கூறுகிறார். அவருக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. ஊர் மக்கள் முன்னிலையில் என் மகள் கடத்தப்பட்டாள். போலீஸ் அதிகாரி சொல்வது போன்று என் மகள் ஓடிப்போயிருந்தாலும் அவள் ஒரு மைனர், நல்லது கெட்டது தெரியாதவள். அதனால் அவளை தேடிக் கண்டுபிடித்து பத்திரமாக ஒப்படைப்பது போலீசாரின் கடமை. ஆனால் டிஐஜி கௌரவ கொலைக்கு ஆதரவாகப் பேசுகிறார்” என்றார்.

No comments:

Post a Comment