Wednesday, 14 December 2011

இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்று – ஷெய்க் கர்ளாவி


இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்று – ஷெய்க் கர்ளாவி



Sheikh Al-Qaradawi1சிரியாவில் நடக்கும் சிவிலியன் படுகொலைகளை அறபு நாடுகளினால் தடுத்து நிறுத்த முடியாது போனால், ஐ.நா. வின் தலையீட்டைக் கோர சிரிய மக்களுக்கு உரிமை இருப்பதாக கலாநிதி ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி தெரிவித்திருக்கிறார்.
அறபு நாடுகள் ஆட்சியில் துருக்கிய மாதிரியிலிருந்து பயனடைய வேண்டும் என்று அழைத்த அவர் அந்த மாதிரியினால் இஸ்லாமியவாதிகளுக்கு மதசார்பற்ற சக்திகளை, அமைதியாக வெற்றி கொள்ள முடிந்தது என்றுத் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் ‘பினான்ஸியல் டைம்ஸ்‘ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் ஷெய்க் கர்ளாவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்று. தடுக்கப்பட்டவையே விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இஸ்லாமியவாதிகளான நாம் தொடர்ந்தும் தடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமியப் பிரச்சாரகர்களும் எதிர்ப்புக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டனர். அவர்களுக்கு எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை. ஆனால், இன்று அநியாயக்கார ஆட்சியாளர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் தமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இஸ்லாமியவாதிகளுக்கு இப்போது எந்தத் தடையுமில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எகிப்திய ஸலபிகளின் அந்நூர் கட்சி புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இது அவர்களது முதல் அரசியல் அனுபவமாகும். அவர்கள் மக்களுடன் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிராந்திய நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் நிகழும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தனது அரசியல் பலத்தை வலுப்படுத்த முடியாத இப் புதிய சூழ் நிலையில், மேற்கு நாடுகள் இஸ்லாத்துடன் எப்படியான உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புரட்சி நடைபெறும் நாடுகளும் இஸ்லாமியவாதிகள் ஆளும் நாடுகளும், மேற்குடனும் இஸ்ரேலுடனும் உறவாடுவதில் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமான மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுக் கொடுக்காத, அதை அடைவதில் சமரசத்தையோ பேச்சுவார்த்தையையோ ஏற்காத மக்கள் எழுச்சியாக இருப்பதுதான் அறபுப் புரட்சியின் சிறப்பம்சமாகும்.
மக்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாயின், உள்ளிருந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருக்கிறார்.
‘பினான்ஸியல் டைம்ஸ்‘ பத்திரிகை பெரும்பாலான அறபு மக்கள் ஷெய்க் கர்ளாவியை அறபுப் புரட்சிகளின் ஆன்மீகத் தலைவராக கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment