
சிராஜ் மஷ்ஹூர்
கொழும்பை அண்மித்துள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றிற்கு உதவி செய்வதற்காக சிலர் சென்றிருந்தனர். பின்தங்கிய பாடசாலை ஆதலால் மாணவர்களை கல்வி ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பது அவர்களது மன விருப்பம். மாணவ, மாணவியரைப் பாராட்டும் வகையில் பரிசளிக்க எண்ணிய அவர்கள், உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று அவர்களிடம் கேட்டனர்.
அதற்கு "சோறு" என வளர்ந்த மாணவி ஒருத்தி பதிலளித்த போது, உதவி செய்யச் சென்றோர் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர். நிலமையைப் புரிந்துகொண்ட அவர்களது கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தோடத் தொடங்கின. ஒருவேளைக்கேனும் சோறு உண்ண முடியாமல் தவிக்கும் நமது சமூகத்தின் அவல நிலை இது. இன்றாவது சோறு கிடைக்காதா என்ற ஏக்கம் தான் அந்த மாணவியின் பதிலில் வெளிப்பட்டது.
இதேபோல் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரி ஒருத்தி வீடுகளுக்குச் சென்று உதவி ஒத்தாசைகளைச் செய்து சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். இத்தனைக்கும் அவள் மணமானவள்தான். அவளது கணவனோ போதைப்பொருள் வியாபாரி. பொலிஸாரிடம் சிக்குண்ட அவன் சிறைக் கம்பிகளை எண்ணியபோது இவளால் என்ன செய்ய முடியும்?
ஒருவாறாக தண்டனை முடிந்து கணவன் தங்குமிடத்திற்குத் திரும்பினான். அவர்கள் தங்குவதற்கென, தெரிந்தவர்கள் மன மிரங்கி தமது வீட்டில் ஒதுக்கமாகவுள்ள ஒரு சிறு பகுதியை வழங்கியிருந்தனர். தங்குமிடம் வந்து சேர்ந்த கணவன், ஆதரவளித்த வீட்டு உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிளையே திருடி விற்றுவிட்டான். அதற்கு மேலும் அவர்கள் பொறுப்பார்களா? வீட்டை விட்டே அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.
இந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? கணவனோ குடும்பத்தைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இத்தனைக்கும் கைக் குழந்தையோடு சேர்த்து மூன்று பிள்ளைகள் அவளுக்கு. வாழ்வின் அடுத்த கணம் பற்றி முழுமையாக நம்பிக்கை இழந்து தண்டவாளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மூன்று பிள்ளைகளோடு சேர்த்து தனது வாழ்வையும் முடித்து விடுவதுதான் அவளது தீர்மானமாக இருந்தது.
தண்டவாளத்தை நெருங்கிய போது அவளது உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டது. தனக்குத் தெரிந்த பெண்ணொருவரை நாடி ஏன் உதவி கோரக் கூடாது என்று அவளது மனம் சிந்திக்கத் தலைப்பட்டது. வைத்த கால்களை பின்வாங்கியவளாக அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி நடக்கலானாள்.
தனது நிலையை அப்பெண்ணிடம் பகிர்ந்துகொண்டபோது, அவளும் மனமிரங்கி மாதம் 500 ரூபாய்க்கு வாடகை வீடொன்றை (அதனை வீடு என்று சொல்ல முடியாது) உதவியாகப் பெற்றுக் கொடுத்தாள். அதனால், அவளது வாழ்க்கை திசை மாறியது. 2000 ரூபாய் முற்பணத்துடன் 500 வாடகை. இதுதான் அந்தப் பெண் செய்த உதவி.
இவை நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட உண்மைச் சம்பவங்கள். அன்றாடம் இவ்வாறான சம்வங்கள் பலவற்றை நேரடியாக எதிர்கொள்கிறோம் அல்லது பிறர் சொல்லக் கேட்கிறோம். பல சந்தர்ப்பங்களில் மிக அற்பமான உதவிகள் கூட, மக்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. இரண்டாவது சம்பவம் அதற்கு நல்ல உதாரணம்.
வறுமை நமது சமூகத்தின் ஆழத்துள் புரையோடிப் போயிருக்கிறது. அதற்கு என்ன தீர்வை நாம் நம்மளவில் எடுத்திருக்கி றோம்? குறிப்பாக றமழானில் பெற்ற எவ்வளவோ ஆன்மீகப் பாடங்களுக்கு அப்பால், சமூகம் சார்ந்த இந்தப் பாடம் குறித்து நம்மை சுயவிசாரணை செய்து கொள்வோம்.
துயர் செறிந்த இவ்வாறான சம்பவங்களைக் கேட்டு அனுதாபப்படுகிறோம். பின்னர் மறந்து விடுகிறோம். வறுமை எத்தனை பேரின் உள்வீடுகளில் தீயாய் எரிகிறது.
அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையும் திட்டங்களையும் நோக்கி நாம் விரைவாக நகர வேண்டியுள்ளது. ஸகாத்தை கூட்டாக முன்னெடுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே பல இடங்களில் உள்ளனதான். எனினும், அவற்றுள் பலவற்றில் நிறுவன ரீதியான முறைமைகளும் ஒழுங்குகளும் பலவீனமாகவே உள்ளன.
அத்தோடு பொருளாதாரம் சார்ந்த வேறு நிறுவன முயற்சிகளும் பரவலாக தேவையாக உள்ளது. குறிப்பாக கடன் சுமைகளிலிருந்து மீட்சி பெறும் வகையில் வட்டி முறைகளிலிருந்து விடுபட்டு மக்களுக்கு உதவும் வெவ்வேறு நிதி நிறுவனங்களின் தேவை இன்று மிகவும் இன்றியமையாததாய் மாறியுள்ளது.
நம்மிடமுள்ள சமூகம் சார்ந்த நிதி நிறுவனங்களை முறையாக ஒழுங்கமைப்பது, அதன் குறைபாடுகளை நிவர்த்திப்பது, அதன் இடைவெளிகளை இனங்கண்டு வலுப்படுத்துவது நமது முதற் பணியாகும். அத்தோடு புதிய பல திசைகளை நோக்கி நமது கவனத்தைக் குவிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார நிலை தொடர்பாக எம்மிடம் சரியான தரவுகளோ தகவல்களோ இல்லை.
No comments:
Post a Comment