
சென்னை:முல்லைப்பெரியாறு அணை குறித்து மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்பது சந்தேகம் என கருதப்படுகிறது.
முன்னர், இரு மாநில அரசு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழ அரசு அறிவித்தது.இதனைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதுத்தொடர்பாக இரு மாநில அரசுகளின் பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. அதில், டெல்லியில் டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி பேச்சுக்கான சந்திப்பை நடத்தலாம். இந்த இரு தேதிகளில் உங்களுக்கு ஏற்ற ஒரு தேதியைத் தேர்வு செய்யலாம் என்று தமிழக, கேரள மாநில அதிகாரிகளுக்குக் கூறப்பட்டிருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் அடங்கிய, “அதிகாரம் அளிக்கப்பட்ட குழு” அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கூட்டம் கடந்த 5-ம் தேதி நடந்தது. அதில், நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு எனக் கூறி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு 10 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசு தனது பதிலை டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதிக்குள் அளிக்கும். உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கும் நிலையில், அதே காலகட்டத்தில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; அதில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம்” எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அணை தொடர்பாக கேரள அரசு தெரிவித்துவரும் தேவையற்ற அச்சங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சில் பங்கேற்றுதான் பதில் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு நடத்தவிரும்பும் பேச்சில் தமிழக அரசு பங்கேற்காது எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment