Saturday, 10 December 2011


Saiful IslamDr. ஸைபுல் இஸ்லாம், MBBS, M.Sc (Nutrition) 
வேலைகளை ஒழுங்குபடுத்தல் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடிப்படை அம்சமாகக் காணப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் மனிதன் நிச்சயம் நிறையவே சாதிப்பான். சாதித்த மனிதர்களின் வரலாற்றை வாசித்தால் அவர்களனைவரும் தமது வேலைகளை, விவகாரங்களை ஒழுங்குபடுத்தி செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு மனிதன் தனது விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான நடைமுறை வடிவங்கள் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துகிறோம்.
எந்தவொரு பணியிலும் ஈடுபட முன்பாக தன்னை மனோரீதியாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், தான் ஈடுபடப்போகும் விவகாரத்திற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். தான் செய்யப்போகும் வேலை குறித்து அமைதியாக, ஆறுதலாக சிந்திக்க வேண்டும். ஒரு மனிதனது வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் அவன் நேரமெடுத்து, தனது வேலைகளை தயார்படுத்துவதிலும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலுமே தங்கியுள்ளது. நேர முகாமைதான் இதனைத் தீர்மானிக்கிறது. நிஜத்தை மனதாற உள்வாங்கவேண்டும்.
இங்கு தன்னுடைய வேலைகளை எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சில நடைமுறை உதாரணங்களை தருகிறோம்.
1. To do list போடுதல்
ஒரு நாள் துவங்க முன்னர் அன்றைய தினமுள்ள வேலைகளை அடையாளப்படுத்தி, அவற்றில் எதனை முற்படுத்துவது எவற்றைப் பிற்படுத்துவது என்பதில் தெளிவாக இருத்தல். ஒரு நாளை இந்த வழிமுறையில் ஆரம்பிப்பவருக்கும் அப்படி ஆரம்பிக்காத ஒருவருக்குமிடையிலே வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ளுதல்.
2. முன்னுரிமைப்படுத்தல் ஒழுங்கு (Priority Order)
தனது வாழ்வில் நாளாந்த விடயங்களில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
3. நேர வரையறை (Time Limit)
ஒவ்வொரு செயலுக்குமுள்ள காலம், நேரம் என்பவற்றைத் தெரிந்திருந்தல். ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட காலம், நேரம் தேவைப்படும். வேலையின் வகைகளைப் பொறுத்து இவை வித்தியாசப்படும். ஒவ்வொருவரும் தமது காலத்தையும் நேரத்தையும் அடையாளப்படுத்தி சரியாக நடைமுறைப்படுத்தினால் வீணான குளறுபடிகளிலிருந்து விடுபட முடியும்.
4. எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ளல்
எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கும்போது அதற்குரிய நேர முக்கியத்துவத்தை விளங்கி அவற்றை முன்னெடுத்தல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் தாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் எதிர்பாராத பிரச்சினைகளில் சிக்க வேண்டி வரலாம். அப்போது பதறியடித்துக் கொண்டு தடுமாறுவதில் எப்பிரயோசனமும் இல்லை. எனவே, எதாவதொரு வேலைத்திட்டத்திற்கு உட்பட முடியுமான எதிர்பார்த்திராத விவகாரங்களை அடையாளம் கண்டு மாற்றீடுகளை ஏற்படுத்திவைத்தல்.
5. ஐந்து நிமிடங்களுக்கு குறைவான வேலைகளை உடனே செய்து முடித்தல்
எந்தவொரு சிறிய வேலையையும் பிற்போடக் கூடாது. அவை சேர்ந்து பின்னர் பெரிய வேலையாகி, ஏனைய பிரதான வேலைகளுக்குத் தடையாகிவிடும்.
6. பிற்போடுவதைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் பிற்போடல்
இயலுமானவரை உரிய நேரத்திலேயே வேலைகளை செய்து முடிக்க முயற்சித்தல்.
7. மற்றவர்களின் நேர முகாமைத்துவத்தைப் பேண ஒத்துழைத்தல்
இந்த விடயங்களில் பலர் தவறுவிடுவதைக் காணமுடியும். உதாரணமாக ஒருவரை சந்திக்கச் செல்ல வேண்டுமாக இருந்தால் முன்கூட்டியே அனுமதியெடுத்துக் கொள்ளல். சந்திப்பினை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளல். ஒருவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை, மதிப்பானது அவர் நம்மீது நல்லெண்ணம் கொள்வதற்கு வாப்பாக அமையும்.
8. ஒரு விடயத்தை சேய்வதற்கு முன் அதற்குரிய சாதனங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஆரம்பித்தல்
உதாரணமாக, கட்டுரை யொன்றை எழுதுவதாக இருந்தால் பேனை, தாள், உஷாத்துணை நூல்கள் போன்ற தேவையான பொருட்களைத் தயார்படுத்திக் கொண்டு எழுதுதல்.
9. இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take a Break)
ஒரு வேலையை தொடர்ந்து செய்யாமல் பகுதி பகுதியாகச் செய்தல். சிறிய சிறிய இடைவேளைகளை எடுப்பதன் மூலம் அவற்றை விரைவாகவும் நேர்த்தியாகவும் முடித்துவிடலாம். இதன்மூலம் சோர்வையும் களைப்பையும் தவிர்க்கலாம்.
10. Buffer Time
தான் செய்யப்போகுப் வேலை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரமொதுக்கி குறிப்பெடுத்தல். உதாரணமாக, தான் அலுவலக மொன்றில் வேலை செய்வதால் அந்த அலுவலகத்தை சுத்தமாக வைத்திருத்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்தல், தேவையான விடயங்களை, தமது கணினியிலுள்ள பைல்களை ஒழுங்குபடுத்தல், அலுவலக மேசையை ஒழுங்குபடுத்தல்... போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுக்காக தினமும் அரைமணிநேரம் ஒதுக்குதல். கிழமையில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல். மாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குதல். இதன்மூலம் நிறைய நேரங்களை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.
11. இயலாது என்று சோல்லத் தெரிந்து கொள்ளல் (Know how to say No)
சிலர் வருகின்ற அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு, தலையில் போட்டுக் கொள்வார்கள். பின்னர் எதைச் செய்வதென்று தெரியாமல் நேரங்கள் வீணாகிவிடும். தன்னால் இயலாவிட்டால் இல்லைஎன்று சொல்லத் தெரிந்தால் அவற்றை இங்கிதமாக முன்வைக்கலாம்.
12. ஓய்வு நேரம் (Free Time)
இன்றைய உலக மனிதனது வேலைப் பளுவானது ஒரு மனிதனை அவனது ஆன்மாவும் உடலும் சந்திக்க முடியாத ஒன்றாக ஆக்கியிருக்கிறது. எனவே, அவனுக்கு மன அமைதிக்காக, எல்லாச் சோலிகளிலிருந்தும் விடுபட ஓய்வு அவசியம். இந்த ஓய்வு குறுகிய நேரமாக இருக்கலாம்.
13. கவனக் குவிப்பு நேரம் (Focus Time)
ஒருவர், தான் வரைந்திருக்கும் இலக்கு, Key Result, குறிக்கோள்களை பார்க்கவும், அவதானிக்கவும் நேரம் எடுத்தல் வேண்டும். இது மாதத்தில் ஒரு நாளாக இருக்க முடியும். அல்லது கிழமையில் ஒரு மணித்தியாலமாக இருக்க முடியும். தனது பாதையை அவன் ஆறுதலாக இருந்து பார்வையிடல் அவசியம்.
14. வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குதல்
குறிப்பாக, பிரச்சாரகர்களுக்கு இது மிகவும் அவசியப்படுகிறது. வாசிப்பு ஒரு மனிதனை உருவாக்குவதில், அவனை நெறிப்படுத்துவதில், அவனை வலுவூட்டுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது.
15. பயன்படுத்தாமல் வீணாகக் கழியும் நேரங்கள் (Useless Time)
பல மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்கள் இப்படி வீணாக் கழிகின்றன. அவன் பிரயாணம் செய்யும் நேரம், பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நேரம் என்பன. இப்படியான நேரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment