Wednesday, 8 August 2012

மியான்மரில் மீண்டும் கலவரம்: 3 பேர் மரணம்!

'Three dead' in fresh Myanmar violence
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்த மேற்கு மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. புதிய தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மை பெளத்தர்களுக்கும் இடையே மோதல் நடந்ததாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களா? என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
நிலைமைகள் வழக்கமான நிலையில் இருப்பதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொடிய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழல் குறித்து உலக சமூகம் கவலை அடைந்துள்ள சூழலில் மீண்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ரோஹிங்கியா கூட்டுப் படுகொலைகளை குறித்து சுதந்திர விசாரணை நடைபெற வேண்டுமென நேற்று முன்தினம் ஐ.நா தூதர் தாமஸ் ஓஜியாக் விண்டானோ கோரிக்கை விடுத்திருந்தார்.

சிரியா பிரதமர் அணி மாறினார்: ஜோர்டானில் அடைக்கலம்!

Syrian PM defects to opposition forces
டமாஸ்கஸ்:சிரியா பிரதமர் ரியாத் ஃபரீத் ஹிஜாப் அணிமாறி எதிர்கட்சிகளுடன் இணைந்துள்ளார். அவர் ஜோர்டானுக்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹிஜாப் ஜோர்டானுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளனர். அதேவேளையில் ஹிஜாபை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதாக சிரியா அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஜுன் 23-ஆம் தேதி சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத், ஹிஜாபை புதிய பிரதமராக நியமித்தார். ஹிஜாப் அணி மாறியதைத் தொடர்ந்து துணை பிரதமர் உமர் கல்வான்ஜிக்கு பிரதமரின் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
1998-ஆம் ஆண்டு முதல் பாஅஸ் கட்சியின் உறுப்பினரான ஹிஜாப், சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கியபிறகு அணி மாறும் ஆஸாத் அரசில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் நபர் ஆவார்.
இதனிடையே சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அரசு தொலைக்காட்சி-ரேடியோ நிலையங்களை கைப்பற்ற எதிர்ப்பாளர்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது என்று சிரியா செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உமரான் அல் சுஐபி தெரிவித்துள்ளார்.
அலப்போ நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்ற ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ராணுவ தாக்குதலில் 9 பேர் பலியானதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமா மாகாணத்தில் ஹர்பன்ஃபாஸாவில் ராணுவம் நடத்திய  தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று எதிர்கட்சியான சிரியா தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகில் ஒரு பில்லியன் மக்கள் கடும் பட்டினியால் வாடுகின்றனர்!

Nearly a billion people worldwide are starving
லண்டன்:உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள் பட்டினியால் வாடுவது உலக மக்கள் சமூகத்திற்கு அவமானமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்பது உலகமக்களை மாத்தியோசிக்க தூண்டவேண்டும்.
இந்த ஆண்டு மட்டும் 4 கோடியே 30 லட்சம் பேர் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.

எகிப்து எல்லை தாக்குதல்:ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிரான சதித்திட்டம்!

எகிப்து எல்லை தாக்குதல்
கெய்ரோ:சியோனிஸ்டுகளின் கடுமையான தடையினால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்த இஸ்லாத்தின் எதிரிகள் புதிய தந்திரங்களை கையாளத் துவங்கியுள்ளனர்.
எகிப்தின் ஸினாய் மாகாணத்தில் இஸ்ரேல் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரஃபா எல்லைக்கு அருகில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமுற்றனர். எகிப்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலின் பின்னணியில் யார்? என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், ராணுவம் ஃபலஸ்தீன் மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றது. அதேவேளையில் ஃபலஸ்தீன் மக்கள் இக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். தாக்குதலுக்கு யார்? காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இச்சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடிக்கின்றன.

அஹ்மத் ஷஃபீக் யு.ஏ.இ அமீரின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகர்!

Ahmed Shafiq
அபுதாபி:எகிப்தின் முன்னாள் பிரதமரும், கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய வேட்பாளருமான அஹ்மத் ஷஃபீக் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளரும், அபுதாபி அமீருமான ஷேக் கலீஃபா பின் ஸெய்தின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அமீரின் அலுவலகத்தில் இருந்து வெளியான சிறப்பு செய்திக் குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது முர்ஸியிடம் தோல்வியை தழுவியவுடன் அஹ்மத் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டார். உம்ராவுக்கு பிறகு புதிய அரசியல் கட்சியை துவக்குவதற்கான பிரச்சாரத்திற்காக எகிப்திற்கு திரும்புவேன் என கூறி ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறியிருந்தார்.
ஆனால், பின்னர் அவர் அபுதாபிக்கு வருகை தந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய அதிகாரப்பூர்வ பதவி கிடைத்துள்ளதால், எகிப்தின் அரசியலில் இருந்து விலகவே ஷஃபீக் திட்டமிட்டுள்ளார் என கருதப்படுகிறது. சில ஊழல்கள் தொடர்பாக கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்பட்டது

மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி!

Hamas Holds Rally to Protect Al-Aqsa
காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர். பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது.
யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முஹம்மது அபூ அஸ்கர் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி!

Curiosity lands on Mars
வாஷிங்டன்:விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லாக அமெரிக்க விண்வெளி மையமான நாஸா  செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதன் முக்கியப் பணி செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் உள்ளனவா என்பதை சோதனையிடுவதே.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஃப்ளோரிடாவில் கேப் கனாவெரல் நிலையத்தில் இருந்து மார்ஸ் சயன்ஸ் லேபரட்டரி என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 56.7 கோடி கிலோ மீட்டரை தாண்டி இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 900 கிலோ கிராம் எடைகொண்ட இந்த விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.

மீண்டும் சங்க்பரிவாருடன் கை கோர்க்கும் ஜெயா: ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு!

VP election- Jaswant gets Jayalalithaa's support
சென்னை:சங்க்பரிவாருக்கு எப்பொழுதும் உற்றத் தோழியான தமிழக முதல்வர் ஜெயலலிதா துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அன்சாரி வெற்றிப் பெறுகிறார்!



Ansari 'favourite to win' vice presidential election
புதுடெல்லி:14-வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்சாரி மீண்டும் வெற்றி பெற்று துணைக் குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.
அன்சாரியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார். அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை சாராத சில கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இவர்களில் 500 பேரின் வாக்குகள் அன்சாரிக்கு ஆதரவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு மட்டும் மக்களவையில் 204 உறுப்பினர்களும்; மாநிலங்களவையில் 71 பேரும் உள்ளனர். திரிணமூல் காங்கிரசுக்கு மக்களவையில் 19 பேரும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். திமுகவுக்கு மக்களவையில் 18 பேரும் மாநிலங்களவையில் 7 பேரும் உள்ளனர்.
அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். பகுஜன் சமாஜ கட்சிக்கு மக்களவையில் 21 பேரும் மாநிலங்களவையில் 15 பேரும் உள்ளனர்.
ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் 114 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 49 ஆகும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவையில் 20 பேரும் மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். சிவசேனைக்கு மக்களவையில் 11 பேரும் மாநிலங்களவையில் 4 பேரும் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் மொத்தம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக தனது ஆதரவை ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்குவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தது.

அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மத்திய அரசு கூறுகிறது!



Assam violence
புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்.

முஸ்லிமாக மாறி திருமணம் புரிந்த ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி ஃபிஸா முஹம்மது மரணத்தில் மர்மம்!

Mystery shrouds death of Fiza, ex-wife of former Haryana deputy CM
சண்டிகர்:ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் மனைவியான ஃபிஸா முஹம்மதின்(வயது 39) உடல் அழுகிய நிலையில் மொஹாலியில் உள்ள அவரது வீட்டு படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது.
அனுராதா பாலி என்கிற ஃபிஸா முகமது மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். இவரது உடல் தலைநகர் சண்டீகர் அருகே உள்ளே மொஹாலியில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று(திங்கள்கிழமை)கண்டெடுக்கப்பட்டது.
அவருடைய வீட்டினுள்ளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல்வாசிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் ஃபிஸா முஹம்மதின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது

டெல்லி போலீஸ் நடத்தியது போலி என்கவுண்டர்! – உயர்நீதிமன்றம்!

7 acquitted by Delhi high court
டெல்லி:டெல்லி மாநகரத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என குற்றம் சாட்டி என்கவுண்டர் மூலம் 7 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த சம்பவம் போலியானது என கூறி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது. இது டெல்லி போலீசுக்கு  பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி டெல்லி போலீஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
போலி என்கவுண்டரில் கைது செய்த நபர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்யும் சூழல் இல்லை என்று நீதிபதிகளான எஸ்.ரவீந்திர பட், எஸ்.பி.கார்க் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
2005-ஆம் ஆண்டு டெல்லி-குர்கான் எல்லையில் அரங்கேறியதாக கூறப்படும் என்கவுண்டர் போலியானது என்றும், அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலைச் செய்ய வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே வேளையில் போலி என்கவுண்டரை உருவாக்கிய போலீஸ் குழுவில் நான்கு பேர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்களை டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கொண்டது. இவர்கள் மீது விசாரணை நடத்தி துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.
2005 ஜூலை 5-ஆம் தேதி டெல்லி-குர்கான் எல்லையில் காரில் சென்று கொண்டிருந்த தீவிரவாதிகளை என்கவுண்டர் மூலம் சரணடைய வைத்ததாக டெல்லி போலீஸின் சிறப்புக் குழு கூறியது.