7 Aug 2012

டமாஸ்கஸ்:சிரியா பிரதமர் ரியாத் ஃபரீத் ஹிஜாப் அணிமாறி எதிர்கட்சிகளுடன் இணைந்துள்ளார். அவர் ஜோர்டானுக்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹிஜாப் ஜோர்டானுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளனர். அதேவேளையில் ஹிஜாபை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதாக சிரியா அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஜுன் 23-ஆம் தேதி சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத், ஹிஜாபை புதிய பிரதமராக நியமித்தார். ஹிஜாப் அணி மாறியதைத் தொடர்ந்து துணை பிரதமர் உமர் கல்வான்ஜிக்கு பிரதமரின் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
1998-ஆம் ஆண்டு முதல் பாஅஸ் கட்சியின் உறுப்பினரான ஹிஜாப், சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கியபிறகு அணி மாறும் ஆஸாத் அரசில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் நபர் ஆவார்.
இதனிடையே சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அரசு தொலைக்காட்சி-ரேடியோ நிலையங்களை கைப்பற்ற எதிர்ப்பாளர்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது என்று சிரியா செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உமரான் அல் சுஐபி தெரிவித்துள்ளார்.
அலப்போ நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்ற ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ராணுவ தாக்குதலில் 9 பேர் பலியானதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமா மாகாணத்தில் ஹர்பன்ஃபாஸாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று எதிர்கட்சியான சிரியா தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment