7 Aug 2012

சென்னை:சங்க்பரிவாருக்கு எப்பொழுதும் உற்றத் தோழியான தமிழக முதல்வர் ஜெயலலிதா துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஜஸ்வந்த் ஆதரவு திரட்டினார். அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை சென்னை வந்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜுலு, அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மு. தம்பிதுரை, தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறியது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும்.
தனிப்பட்ட முறையில் கடந்த 28 ஆண்டுகளாக அவர் எனது மரியாதைக்குரிய நண்பர். 1984-ல் மாநிலங்களவையில் நான் உறுப்பினராக இருந்தபோது அவரும் எம்.பி.யாக இருந்தார். நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது அவசியம். இது எனது உறுதியான நம்பிக்கை, கொள்கையாகும். ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதற்காக எதிர்க்கட்சி போட்டியிடாமல் இருக்கக் கூடாது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட நண்பர் என்பதற்காகவும் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் ஜெயலலிதா.
ஜஸ்வந்த் சிங் நன்றி: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், 1984-ம் ஆண்டு மாநிலங்களவையில் என்னுடன் பணியாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அவருக்கு நன்றி என்றார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் இத்தேர்தலை புறக்கணிப்பது குறித்து கேட்டபோது, அது அவர்களது முடிவு என்றார் ஜஸ்வந்த் சிங்.
அ.தி.மு.கவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 14 எம்.பிக்கள் உள்ளனர்.
வை.கோவும் சங்க்பரிவாரத்தின் பக்கம் சாய்ந்தார்
குடியரசு துணை தலைவர் தேர்தலில் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வை.கோவும் ஜஸ்வந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஜஸ்வந்த் சிங் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment