Tuesday, 3 January 2012

மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு


கஷ்மீர்:மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு – ஒருவர் பலி

கஷ்மீர் மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு ஒருவர் பலி
ஸ்ரீநகர்:கஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதுடன் மின்தடையும் நீடிப்பதால் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் போனியார் பகுதியை சார்ந்த மக்கள் மின்சாரம் கோரி மின்நிலையத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது சி.ஐ.எஸ்.எஃப் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்திய அராஜக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஸ்ரீநகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போனியாரில் உரி பவர் ப்ராஜக்டிற்கு முன்னால் போராட்டம் நடத்தியவர்கள் மீதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்று ப்ராஜக்ட் அலுவலகத்தின் முக்கிய வாசலுக்கு அருகே வந்தவேளையில் காவலுக்கு நின்றிருந்த படையினர் அநியாயமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக செய்திகள் கூறுகின்றன.
துப்பாக்கிச்சூட்டில் அல்தாஃப் அஹ்மத் ஸூத்(வயது 25) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். படுகாயமடைந்த அப்துல் மஜீத்கான் மற்றும் பர்வேஸ் அஹ்மது ஆகியோர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பத்தினால் மக்களிடையே பதட்டம் நிலவி வருவதோடு, போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் பற்றாக்குறை இருந்து வந்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மேலும் மோதல் சூழல் உருவாகிவிடுமோ என அஞ்சி அப்பகுதியில் கூடுதல் படையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment