Tuesday, 3 January 2012

பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை


பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை



pm manmohan
புதுடெல்லி:ஊடகங்கள் மீது வெளியே இருந்து எவ்வித கட்டுப்பாடும் உருவாகாது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
‘தைனிக் ஜாக்ரண்’ என்ற ஹிந்தி நாளிதழின் நிறுவனர், ஆசிரியருமான பூரண சந்திர குப்தாவின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டு உரை நிகழ்த்துகையில் இந்தக் கருத்தை அவர்
தெரிவித்தார். அதேவேளையில் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பரபரப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்களை அறிவுறுத்தினார் மன்மோகன்.


மேலும் அவர் கூறியதாவது: ‘இந்தியப் பத்திரிகைகள் எவருக்கும் அஞ்சாமல், எதற்கும் தயங்காமல் தங்களுடைய மனதில்பட்ட கருத்துகளைத் துணிச்சலுடன் தெரிவித்துவருவது குறித்து நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். தேசத்துக்கு முக்கியமான பிரச்னைகளில் மட்டும் பத்திரிகைகள் கவனம் செலுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.
பிரச்னை எதுவோ அதில் மட்டும் கவனம் செலுத்தி, விருப்பு – வெறுப்பு இல்லாமல் செய்திகளை வெளியிடுவது குறித்து செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகளே தங்களுக்குள் பேசி கருத்தொற்றுமை அடிப்படையில் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு கட்சியை அல்லது தனி நபரைப் போற்றி எழுதும் முறையற்ற செயல்களுக்குப் பத்திரிகைகள் தாங்களாகவே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பத்திரிகைகளை அரசோ, சுயேச்சையான ஓர் அமைப்போ கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை எவருமே ஏற்கவில்லை. அது அவசியமும் இல்லை.
செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் அதிகம்பேரை சென்றடைவது குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறோம். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இதற்குக் காரணம்.
ஆட்சியில் இருப்போருக்கு அஞ்சாத பத்திரிகைகள்தான் உண்மையான ஜனநாயகத்துக்கு உரம் சேர்க்க முடியும்.
மக்களின் தேவைகள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இந்திய மொழிகளில் அச்சாகும் பத்திரிகைகளால்தான் வலுவாக எடுத்துரைக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment