Monday, 16 January 2012

பாதுகாப்பு செயலாளர் நீக்கம்: சூடு பிடிக்கும் பாகிஸ்தான் அரசியல்

பாதுகாப்பு செயலாளர் நீக்கம்: சூடு பிடிக்கும் பாகிஸ்தான் அரசியல்

khalid naeem lodhi
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செயலாளர் காலித் நயீம் லோடியை பிரதமர் கிலானி நீக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
காலித் நயீம் பாக்.ராணுவ தலைமை தளபதிக்கு நெருக்கமானவர் ஆவார். சட்டவிரோத நடவடிக்கை மற்றும் மோசமான குணநலனும் கண்டுபிடித்ததை தொடர்ந்து லோடியை நீக்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. முக்கிய துறைகள் இடையே தவறான புரிந்துணர்வை லோடியின் செயல்பாடுகள் ஏற்படுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலாளர் நர்கீஸ் ஸேத்தியிடம் பாதுகாப்பு செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கும், ஐ.எஸ்.ஐ மீது அரசுக்கு கட்டுப்பாடு இல்லை என உச்சநீதிமன்றத்தில் லோடி அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறியிருந்தார். லோடியின் நடவடிக்கையை கிலானி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே,அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டதை தொடர்ந்து இன்று அவசர பாராளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும் நடத்திய சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
சர்தாரியின் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் பிரதமர் கிலானி தோல்வியை தழுவியுள்ளார். இவ்வழக்குகளில் உடனடியாக விசாரணையை துவக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி அதிருப்தியை தெரிவித்தது. சர்தாரி ராஜினாமாச் செய்யப்போவதாக த நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால்,அவரது அலுவலகம் இச்செய்தியை மறுத்துள்ளது. மெமோ சர்ச்சையை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என ஐ.எஸ்.ஐயும், ராணுவமும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததை கிலானி ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்முகத்தில் கடுமையாக விமர்சித்தார்.
லோடியின் நீக்கம் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லோடிக்கு பாக்.ராணுவ தலைமைத் தளபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவருக்கு பாக்.பாதுகாப்பு அமைச்சரை விட அதிக செல்வாக்கு உள்ளது. பாகிஸ்தான் அரசியலில் எக்காலத்திலும் தலையிட்டு வரும் ராணுவத்தின் பலத்தை குறைக்க அதிபர் சர்தாரி ரகசியமாக அமெரிக்காவின் உதவியை கோரி எழுதிய கடிதம்(மெமோ கேட்) தொடர்பான விவகாரம் பி.பி.பி அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதலை உருவாக்கியது. அதன் தொடர்ச்சிதான் லோடியின் நீக்கம்.

No comments:

Post a Comment