Tuesday, 3 January 2012

கம்யூனிச ராஜவம்ச ஆட்சி

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!
முன்பு சோவியத் குறித்த கதை ஒன்று உலாவியது:ஒரு நாள் இரண்டு திருடர்கள் ரஷ்யாவின் க்ரம்ளின் மாளிகையில் நுழைந்தனர். சோசியலிச நாடு என்பதால் மாளிகை முழுவதும் தேடிய பொழுதும் திருடர்கள் இருவருக்கும் கையில் ஒன்றும் கிடைக்கவில்லை. நிராசையுடன் சோர்ந்துபோய் மாளிகையை விட்டு வெளியே வரும் வேளையில் அவர்களின் பார்வையில் இரண்டு தகரப்பெட்டிகள் தென்பட்டன. கிடைத்ததே மிச்சம் என கருதி இரண்டு தகரப் பெட்டிகளையும் தூக்கி தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்றனர். அப்பெட்டிகளை இரண்டையும் ஆர்வத்துடன் திறந்தபொழுது அவற்றில் சில காகிதங்கள் இருந்தன. அக்காகிதங்களில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் முன்கூட்டியே எழுதிவைக்கப்பட்டிருந்தன.
கம்யூனிச சுவர்க்கங்களில் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தின் அவல நிலையை இக்கதையே விளக்கும். இதனை கூற காரணம் வடகொரியாவிலிருந்து வரும் செய்திகளாகும்.
கம்யூனிச இரும்புக் கோட்டையான வடகொரியாவில் வாழ்நாள் அதிபராக பதவி வகித்த கிம் ஜோங் இல் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால் 19-ஆம் தேதி அன்றுதான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜன்சி(கெ.சி.என்.எ) கிம் ஜோங் இல்லின் மரணச்செய்தியை வெளியிட்டது. புதன்கிழமை கிம் ஜோங் இல்லின் இறுதிச்சடங்குகள் தலைநகரில் நடந்து முடிந்தன. புதிய அதிபராக கிம் ஜோங் இல்லின் 28-வயது மகன் கிம் ஜோங் உன் பதவியேற்றுள்ளார்.
ஜனநாயகத்தை குறித்தும், கருத்து சுதந்திரத்தை குறித்தும் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் கட்டுரைகளை எழுதுவதிலும், உரைகளை நிகழ்த்துவதிலும் நமது நாட்டின் இடதுசாரி முற்போக்குவாதிகள் திறமைசாலிகள். ஆனால், சிந்தனையும், நாகரீகமும், தொழில்நுட்பமும் மிகவும் வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டில் கூட பிற்போக்குத்தனமான ஆட்சிமுறையையும், சமூக கட்டமைப்பையும் கொண்ட தேசமாக வடகொரியா திகழ்கிறது.
விசித்திரமான, முட்டாள்த்தனமான வழிகள் மூலமாக அந்த நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரிந்து வருகிறது. வெட்க கேடான தனிநபர் வழிபாடும், வீரப்புருஷ ஆராதனையும் அதன் ஒரு பகுதியாகும். கிம் ஜோங் இல்லின் மரண செய்தியை அறிவித்த கே.சி.என்.எவின் செய்திக்குறிப்பில் ரசிக்கத்தக்க வகையில் வர்ணனை இடம் பெற்றிருந்தது. அது இவ்வாறு: ‘அன்பிற்குரிய தலைவரின் மரணத்தினால் வலுவானதொரு குளிர்காற்று ஸ்தம்பித்து நின்றது. பரிசுத்தமான பைக்த் மலைகள் மீது வானம் கடும் சிகப்பு நிறமானது. தடாகத்தில் பனிக்கட்டிகள் வெடித்தது. வானமும், பூமியில் ஒரேபோல குலுங்கின.’
வடகொரியா மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகள் எங்கே எல்லாம் ஆட்சி புரிகின்றார்களோ அங்கே ஏகாதிபத்தியமும், குடும்ப ஆட்சியும், தனிநபர் வழிபாடும் உள்ளிட்ட பிற்போக்குத்தனமான கொள்கைகளின் விசித்திரங்களை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் போக்கை காண இயலும்.
அல்பேனியாவின் அன்வர் ஹோஜா, சீனாவின் மாவோ, கம்போடியாவின் போல்போட், ரஷ்யாவின் ஸ்டாலின், ருமேனியாவின் செஷஸ்க்யூ என கம்யூனிச ஆட்சியாளர்களின் பட்டியல் நீளுகிறது.
சோசியலிச கம்யூனிஸ்ட் சுவர்க்கத்தை கட்டியெழுப்ப இவர்கள் கொன்றொழித்த மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும். முற்போக்கு சிந்தனையில் ஊறிப் போனவராக கருதப்படும் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ கூட இதில் விதி விலக்கல்ல. தனது சொந்த சகோதரனை தனது வாரிசாக நியமித்துள்ளார். ஜனநாயகத்தின் சிறியதொரு அசைவை கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. ஒரு பெண்ணை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஒரு கம்யூனிச நாடு கூட இதுவரை தயாராகவில்லை.
சோசியலிச-மதசார்பின்மையின் பெயரால் அரபு நாடுகளில் ஆட்சியில் அமர்ந்த சர்வாதிகாரிகளை அந்நாடுகளில் வாழும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து அதிகார நாற்காலியில் இருந்து பிடித்து கீழே தள்ளும் இக்காலக்கட்டத்தில் வடகொரியாவை குறித்து சிந்திப்பது முக்கியமாகும்.
அரபு நாடுகளின் மதசார்பற்ற சோசியலிச சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து சுதந்திரமாக தேர்தல்கள் நடைபெற்ற வேளையில் மக்கள் இஸ்லாமிய இயக்கங்களை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். இஸ்லாமிய கட்சிகள் ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் வேளையில் ஜனநாயகம் தகர்ந்து போவதாக பிரச்சாரம் செய்கின்றனர் நமது நாட்டின் மதசார்பற்ற அறிவுஜீவிகள்!
கம்போடியா முதல் கொரியா வரையிலான அனுபவங்கள் மனித வரலாற்றில் கறுப்பு அடையாளங்களாகும். தமது கொள்கையை எந்த நாடுகளில் எல்லாம் பரிசோதனை செய்தார்களோ அங்கெல்லாம் பிற்போக்குத்தனமான அணுகுமுறைகளை தாம் கம்யூனிஸ்டுகள் கையாண்டனர். கிம் ஜோங் அத்தகையதொரு பிற்போக்குத்தனமான முன்மாதிரியாக வரலாற்றில் இடம் பெறுவார்!

No comments:

Post a Comment