பயணிகள் ஜும்ஆ தொழுகையுடன் அஸர் தொழுகையை சேர்த்துத் தொழுதல்
கலாநிதி ஸுஊத் அல்பஸ்யான் (ஸஊதி உலமாக்களில் ஒருவர்)
பிரயாணி ஜும்ஆத் தொழுகையுடன் அஸர் தொழுகையை சேர்த்து தொழுவது ஆகுமானதா?
சலுகையாக வந்துள்ளவற்றைப் பார்க்கும் போது ஜும்ஆ தொழுகையையும், அஸர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது ஆகுமானதாகும். ஜும்ஆ தொழுகை ஒரு பிரயாணிக்கு கடமையான தொழுகையல்ல. அவர் அதனையும் அஸர்தொழுகையையும் சேர்த்துத் தொழுவது சரியானதாகும். ஜும்ஆ தினத்தில் அதிக பிரயாணங்கள் நிகழ்ந்த போதிலும், நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணி அஸர் தொழுகையை ஜும்ஆ தொழுகையுடன் சேர்த்து தொழுவதைத் தடுத்ததாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அவ்வாறு சேர்த்துத் தொழுவது ஆகுமானதல்ல என்றிருப்பின் நபி(ஸல்) அவர்கள் அதனைத் தெளிவுபடுத்தியிருப்பார்கள். அல்லாஹுதஆலா இறக்கியருளியவற்றை நபி(ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்படாதவை அல்லாஹ் மன்னித்தருளிய பகுதிகளாகும். ஒரு பிரயாணி ஜும்ஆ தொழுகையையும், அஸர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது என்ற விடயம் இறைவன் ஒன்றும் கூறாது, மன்னித்துவிட்ட பகுதியாகும். அது ஷரீஆவில் ஆகுமான ஒன்றாகும்.
சட்டத்தீர்ப்பு வழங்கும் சிலர் (முப்திகள்) ஒரு பிரயாணி ஜும்ஆ தொழுகையையும், அஸர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது கூடாது என்று மட்டும் கூறவில்லை. மாறாக, அவ்வாறு தொழுதவரின் அஸர் தொழுகை கூடாததாகும் என்று கூறி, அந்தத் தொழுகையை மீட்டித்தொழ வேண்டும் எனக் கூறியதே என்னை இந்த விடயத்தில் எழுதத்தூண்டியது. தொழுகையின் நிபந்தனைகளும், ருகூன்களும், வாஜிபுகளும் பூரணமாக நிறைவேற்றப்பட்ட தொழுகை எவ்வாறு பாதிலானதாக (கூடாததாக) மாறமுடியும். இது நியாயமான காரணங்கொண்டவர்களால் நிறைவேற்றப்பட்ட தொழுகையாகும்.
இவ்வாறான ஒரு கேள்வி நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எழவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்திலும் அதிக பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். அந்தப் பயணங்களில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதார்கள். ஆனால், இந்த இரண்டு ரக்அத்துகளும் ஜும்ஆவுக்குரியதா? அல்லது ளுஹர் தொழுகைக்குரியதா? என்பதிலே ஐயமுள்ளது. இதுவே கருத்து வேறுபாட்டுக்கான காரணமாக இருக்க முடியும். சில உசாத்துணைகளைப் பார்க்கின்றபோது இது தொடர்பாக பின்வரும் சில சமிக்ஞைகள் மாத்திரமே காணப்படுகின்றன:
01. இமாம் மாவர்தி (ஷாபிஈ அறிஞர்): "ஜும்ஆ தொழுகை ஆரம்பத்தில் 04ரக்அத்களான ளுஹர் தொழுகையாகவே இருந்தது. பின்னர், அது இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையாக மாற்றப்பட்டது."
02. ஸுலைமான் அல்மர்தாவி (ஹன்பலி அறிஞர்): "ஜும்ஆ தொழுகை என்பது தனித்துவமானதொரு தொழுகையாகும்."
03. இப்னு முப்லிஹ்: "ஜும்ஆவானது ளுஹர் தொழுகையை விட சிறந்த தொழுகையாகும். அது தனித்துவமான தொரு தொழுகையாகும். அது சுருக்கப்பட்ட ளுஹர் தொழுகையாகும். ஜும்ஆவே அடிப்படையான தொழுகையாகும், ளுஹர் பகரமான தொழுகையாகும்."
04. ஹாரூன் றஷீத் தனது அரசவையில் இமாம் ஷாபியியும், இமாம் முஹம்மத் இப்னுல் ஹஸனும் இருக்கும் வேளையில் இமாம் முஹம்மத் இப்னுல் ஹஸனிடம் பின்வருமாறு ஒரு வினாவைத்தொடுத்தார்: "றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து அறபா வந்த வேளையில் ஜும்ஆவா அல்லது ளுஹரா தொழுதார்கள்?" அதற்கு இமாம் முஹம்மத் இப்னுல் ஹஸன்: "றஸூல் (ஸல்) அவர்கள் ஜும்ஆவே தொழுதார்கள். ஏனெனில், அவர்கள் தொழுவிக்க முன்னர் உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். ஜும்ஆ தொழுதிருக்காவிட்டால் உரையை இரு பெருநாள் தினங்களைப்போல இறுதியாக நிகழ்த்தியிருப்பார்கள்." என பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment