லத்திகா சரண் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம்
13 Jan 2012
சென்னை:தமிழக டி.ஜி.பியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியின்போது தமிழக டி.ஜி.பியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த நியமனம் செல்லாது என்றும், அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பியை தமிழக அரசு தேர்வுச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து லத்திகா சரண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவர் தனது மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: போலீஸ் டி.ஜி.பி. யாக லத்திகா சரணை நியமிக்க, தமிழக அரசுக்கு சட்டப்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியும் முழு அதிகாரம் உள்ளது. இதை தீர்ப்பாயம் ரத்து செய்தது சட்ட விரோதமானது, தீர்ப்பாயம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கூறிய பிறகுதான் லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அப்படி இருக்கும் போது தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இந்த மனு நீதிபதி எலிப்பி தர்மராவ், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. லத்திகா சரண் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ், போலீஸ் அதிகாரி நட்ராஜ் சார்பில் மூத்த வக்கீல் சோமையாஜியும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, லத்திகாசரண் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமித்தது செல்லும் என்று தெளிவாக தெரிகிறது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்த 3 பெயர் பரிந்துரையில் இருந்து ஒருவரை, அதாவது லத்திகா சரணை அரசு தேர்வு செய்துள்ளது சட்டப்படி சரியானது.
இதை ரத்து செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தான் தமிழக அரசு லத்திகாசரணை தேர்வு செய்துள்ளது. எனவே, டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததும் செல்லும். இதில் நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment