பாக்.கொடி:தோல்வியை தழுவிய ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டம்
8 Jan 2012
பிஜாப்பூர்:கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவத்தில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம சேனாவின் மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வகுப்புக் கலவரத்தை தூண்டும் சதித்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது.
கலவரத்திற்கான தயாரிப்புகளுடன் காத்திருந்த சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகள் போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து ஏமாற்றம் அடைந்தனர்.
புதுவருட தினத்தில் பிஜாப்பூர் மாவட்டம் சிந்தகியில் தாசில்தார் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. வழக்கம் போலவே ஊடகங்கள் இச்சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் என பரப்புரை செய்தன. சில கன்னட பத்திரிகைகள் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஏஜண்டுகள்தாம் காரணம் என செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து பஜ்ரங்க்தள், ஸ்ரீராமசேனா, வி.ஹெச்.பி ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் தலைமையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்கான முயற்சிகளையும் இந்த அமைப்புகள் மேற்கொண்டன.முழு அடைப்பின்போது முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக இச்சம்பவம் தொடர்பாக ஆறு ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த ஆறுபேரை போலீஸார் பெங்களூரில் வைத்து கைது செய்ததை தொடர்ந்து சங்க்பரிவார அமைப்புகள் மெதுவாக பின்வாங்கின.
கல்லூரி மாணவர்களான ராகேஷ் சித்தாராமைய்யா மர், மல்லனகவுடா விஜயகுமார் பாட்டீல், பரசுராம் அசோக் வாக்மோர், ரோஹித் ஈஸ்வர் நவி, சுனில் மடிவளப்பா அகஸார், அனில்குமார் ஸ்ரீராம் சோலங்கர் ஆகியோரை பிஜாப்பூர் போலீஸ் சூப்பிரண்டின் தலைமையில் நேற்று முன் தினம் கைது செய்தனர். அப்பகுதியில் தங்களின் ஆதரவை வலுப்படுத்த வகுப்புக் கலவரத்தை தூண்டுவதற்காகவே பாகிஸ்தான் கொடியை ஏற்றினோம் என இவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவத்தை முஸ்லிம்களின் மீது சுமத்தி அவர்கள் மீது தேசப்பற்றின் பெயரால் ஹிந்துக்களின் உணர்வுகளை தூண்டி கலவரத்தை உருவாக்குவதுதான் இவர்களுடைய திட்டமாகும்.
அதேவேளையில், கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லர் என்றும், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் என ஸ்ரீராமசேனா தேசிய தலைவர் பிரமோத் முத்தலிக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். போலீஸார் கூட்டணி வைத்து செயல்படுகின்றார்கள் என முத்தலிக் குற்றம் சாட்டுகிறார். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுவேன் என்றும் முத்தலிக் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீராமசேனா தீவிரவாத அமைப்பினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முத்தலிக்கையும் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தேசத்துரோக செயலை புரிந்த அமைப்பை தடைச் செய்யவேண்டும் என தெற்கு கர்நாடகா மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பந்த்வால் எம்.எல்.ஏவுமான ரமநாத ராய் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும், பா.ஜ.கவுக்கும் பங்கிருப்பதாக மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் ஹெச்.டி.குமாரசுவாமி தெரிவித்தார்.
சமூகங்களிடையே மோதலை உருவாக்கி கூடுதல் வாக்குகளை பெறுவதற்கான கொடூர தந்திரத்தை சங்க்பரிவாரம் மேற்கொள்கிறது என குமாரசுவாமி குற்றம் சாட்டினார்.
இப்பகுதியில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களின் பின்னணியிலும் சங்க்பரிவார் அமைப்புகளின் கரங்கள் இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது. முன்பு இப்பகுதியில் உள்ள ஒரு கோயில் மற்றும் விவேகானந்தரின் சிலை ஆகியன சேதப்படுத்தப்பட்டிருந்தன.
2008-ஆம் ஆண்டு இப்பகுதியில் உள்ள திப்புசுல்தான் சர்க்கிளில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இச்சம்பவங்களின் பின்னணியிலும் சங்க்பரிவார அமைப்புகள் இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது
No comments:
Post a Comment